கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழல் நிலையில், சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தற்போது ஜூலை 1 ஆம் தேதி முதல், வரும் 1 ஆம் தேதி வரை 6 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்ற அதிகமாகக் காணப்படும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு தொடர்கிறது. சென்னையில் வரும் 5 ஆம் தேதி, நாளை வரை முழு ஊரடங்கு தொடரும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. அதாவது, வரும் 6 ஆம் தேதி முதல், மறு  உத்தரவு வரும் வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகத் தமிழக அரசு கூறியுள்ளது. 

அதன்படி, “ சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை இயங்கலாம்” என்றும், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக, “சென்னையில் டீ கடைகள் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரையில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்படும்” என்றும், அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது.

“ டீ கடைகளில், இரவு 9 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்” என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக காலை 6 மணி வரை இரவு 8 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், “தொலைப்பேசியின் மூமாக ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்” என்றும், தமிழக அரசு கூறி உள்ளது. “உணவுப் பொருட்களை வழங்கும் ஊழியர்கள் அனைவரும், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக் கொண்டே பணியாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

“ வணிக வளாகங்கள் தவிர, அனைத்து ஷோரூம்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் போன்றவை காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதி” அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

“மற்ற செயல் பாடுகளைப் பொருத்தவரை, 19.6.2020 க்கு முன்னர், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 
 
“பொது மக்கள் அரசின் இந்த முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.அத்துடன், “இந்த புதிய கட்டுப்பாடுகள் எல்லாம் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் தொடரும்” என்றும், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், “சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் சமூக பரவலாக மாறவில்லை” என்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ், “ சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப் படுத்த முழு வீச்சில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” குறிப்பிட்டார்.

“ தமிழகம் முழுவதும் கொரோனா இறப்பு விகிதத்தை முற்றிலும் குறைக்கத் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்” அவர் கூறினார். 

“பொது மக்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால், ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும் என்றும்,  கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாகத் தான் உள்ளது” என்றும், ஆணையர் பிராகாஷ் சுட்டிக்காட்டினார்.

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கட்டுக்குள் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதில், தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.

மேலும், “சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர் என்றும், எஞ்சிய 35 சதவீதம் பேரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் வலியுறுத்தினார். 

அத்துடன், “மார்க்கெட், மளிகை, இறைச்சிக் கடைகளில் 22 சதவீத மக்கள் தான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர் என்றும், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் சமூக பரவலாக மாற வில்லை” என்றும் ஆணையர் பிராகாஷ் தெரிவித்தார்.

“சென்னையில் இன்று 11,200 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 1000 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்” பிராகாஷ் சுட்டிக்காட்டினார். 

“சென்னை மாநகராட்சியில் 4, 5, 6 ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றும், போதிய விழிப்புணர்வு, முகக்கவசம் வழங்கப்பட்டதால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் குறைந்துள்ளது” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறினார்.