கல்யாணத்திற்கு வற்புறுத்திய காதலியின் கர்ப்பத்தை கலைத்து, அவரை கடுமையாகத் தாக்கிய காதலனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

ஹரியானா மாநிலத்தில் தான், இந்த காதல் மோதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர், ஹரியானா மாநிலம் குருகிராமின் சக்கர்பூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி விஹாரில், வீட்டு உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

அங்கு, வேலை செய்துகொண்டிருந்த அந்த தமிழக இளம் பெண், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவருடன் காதல் வலையில் விழுந்தார். 

இதனால், இந்தி மொழி பேசும் அந்த காதலனும், தமிழச்சியான அந்த காதலியும், அந்த பகுதியின் பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி காதலர்களாக வலம் வந்தனர்.

இப்படியாக, அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வந்த நிலையில், அந்த இளம் பெண்ணை மயக்கிய அந்த காதலன், அந்த பெண்ணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதன் காரணமாக, அந்த தமிழ் பெண் அடுத்த சில மாதங்களிலேயே கர்ப்பமானார். 

இதனால், முதலில் அதிர்ச்சியடைந்த அந்த தமிழ் பெண், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து, தனது காதலனிடம் கூறி, “என்னை உடனே திருமணம் செய்துகொள்” என்று வற்புறுத்தி உள்ளார். 

ஆனால், இதனை கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த காதலன், சற்று யோசித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து உள்ளார்.

அத்துடன், கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல், அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை அழிக்கச் சொல்லி அடம் பிடித்து உள்ளார். ஆனால், இதனை ஏற்க அந்த இளம் பெண் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, மறுநாள் அந்த இளம் பெண்ணுக்கு போன் செய்த அந்த காதலனும், அவரின் நண்பர்களும், அந்த இளம் பெண்ணை டெல்லி அருகில் உள்ள ஹரியானா மாநிலத்தின் குருகிராமிற்கு “பேச வேண்டும்” என்று கூறி, வரச் சொல்லி இருக்கிறார்கள். 

இதனை நம்பி, அந்த தமிழ் பெண்ணும் அங்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். 

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணுக்கு வயிற்றில் வளர்ந்த 5 மாத குழந்தை, இறந்த நிலையில் குறை பிரசவம் ஆனது. அதன் பிறகு, அந்த பெண்ணுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. 

அதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சேர்ந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அந்த இளம் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த இளம் பெண்ணின் காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, காதலன் மற்றும் அவனது நண்பன் ஒருவனையும் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.