தூத்துக்குடியில் “கர்ணன்” திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், தாணு தயாரிப்பில் உருவான “கர்ணன்” திரைப்படம், தற்போது உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம், ”ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கான குரல்” என்று, தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்து வருகிறது. 

தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும், “கர்ணன்” திரைப்படத்தைப் பார்த்து விட்டு, பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால், “கர்ணன்” திரைப்படம் வெளியானது முதல், இந்த படம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதன் படி, தூத்துக்குடி போல்டன் புரத்தில் இருக்கும் தியேட்டரில், தனுஷ் நடித்த “கர்ணன்” படம் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5 பேர் கொண்ட கும்பல், அங்கு மது போதையில் வந்ததாகத் தெரிகிறது. 

இதனால், தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை திரையரங்கின் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர் என்று கூறப்படுகிறது. அத்துடன், சம்மந்தப்பட்ட 5 பேரின் டிக்கெட்டுக்கான பணத்தையும் திரையரங்க நிர்வாகத்தினர் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்து உள்ளனர். 

இப்படியான நிலையில், “கர்ணன்” படம் ஓடும் தியேட்டருக்குள் தங்களை அனுமதிக்காத காரணத்தால், கடும் ஆத்திரமடைந்த அவர்கள், மீண்டும் இரவு 11 மணி அளவில் தியேட்டருக்கு வந்து, அந்த தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பத்தில், 5 குவார்ட்டர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியது தெரிய வந்திருக்கிறது. அந்த பெட்ரோல் நிரம்பிய குவார்ட்டர் பாட்டிகல்கள் எல்லாம், தியேட்டர் வளாகத்திற்குள் இருந்த தரை பகுதியில் விழுந்து வெடித்து சிதறி உள்ளன. அதே நேரத்தில், அங்கு யாருக்கும் எந்த வித பாதிப்பும் நிகழவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தியேட்டர் நிர்வாகத்தினர், இது குறித்து அங்குள்ள தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சம்வ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த சம்பத்தில் தொடர்புயைட 3 பேரை போலீசார் தற்போது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதனிடையே, தூத்துக்குடியில் “கர்ணன்” திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.