அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு இயங்களைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”அரசியலமைப்புச் சட்டம் தந்த மாமேதை, அண்ணல் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக்கமற்ற - சமத்துவ சமூகம் அமைத்திடுவோம்!அண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும்.” என்றுள்ளார்.


மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில், “அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், ’’ மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தில் நான் தலை வணங்குகிறேன். இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் சிற்பியாக திகழ்ந்து இந்தியர்களுக்கு குறிப்பாக தலித்துகளுக்கு சமூக சீர்திருத்தங்கள், சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அயராத உழைப்புக்கு ஒரு சின்னமாக திகழ்ந்தவர்”  என்று பதிவிட்டுள்ளார்.