தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு வெளியான காப்பான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

பூர்ணா கைவசம் விசித்திரன் திரைப்படம் உள்ளது. இயக்குனர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செய்திகள் கடந்த ஆண்டு பெரிதளவில் பேசப்பட்டது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்ட பூர்ணா, நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். படம் பேசும், அம்மாயி போன்ற படங்களை நடித்து முடித்தார். 

பூர்ணா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் சுந்தரி. கல்யாண்ஜி கோக்கனா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அர்ஜுன் அம்பதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ரிஸ்வான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதன் ட்ரைலர் காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தை கவர்ந்து வருகிறது. பூர்ணாவின் துணிச்சலான நடிப்பை பாராட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள். இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கங்கனா ரனாவத் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான தலைவி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பூர்ணா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.