ஈரோட்டில் 8 வயது சிறுமியிடம் கால் டாக்ஸி ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், அந்த பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

அத்துடன், அந்த பகுதியில் கணவரை இழந்த பெண் ஒருவருடன், கால் டாக்ஸி ஓட்டுநர் தீனதயாளன், குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த விதவை பெண்ணிற்கு 8 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். 

அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனது பள்ளிப் படிப்பைப் படித்து வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சிறுமி தனது வீட்டிற்கு வந்து அம்மாவுடன் வசித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக தீனதயாளன், தொடர்ந்து வீட்டில் இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுமி, வயிற்று வலியால் துடித்து உள்ளார். இதனால், அந்த சிறுமியை அவரது தாயார், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

மருத்துவமனையில், அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக” கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது தயார் கதறி அழுது, சிறுமியிடம் “என்ன நடந்தது?” என்று கேட்டு உள்ளார்.

அதற்கு, சிறுமியோ, “உனது காதலன் தீனதயாளன், என்னை நாசம் செய்து விட்டான் என்றும், தொடர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்தான் என்றும், இது குறித்து உன்னிடம் கூறினால், நம் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று என்னைத் தொடர்ச்சியாக மிரட்டி வந்தான்” என்றும், கூறி அந்த சிறுமி அழுது உள்ளார். இதனைக் கேட்டு அவரது தாயார் இன்னும் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், மருத்துவமனை சார்பில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது குறித்து விரைந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் தேன்மொழி, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் தாயின் காதலன் தீனதயாளன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. தீனதயாளன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, காவல் நிலையத்தில் அந்த குழந்தைகள் நல அதிகாரி புகார் அளித்தார். 

இதனையடுத்து, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. 

இதனிடையே, புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட விதவை பெண், தனது மகளின் வாழ்க்கை அழிந்து போகத் தானே ஒரு காரணமாக மாறி உள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.