கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள துர்கை அம்மன் கோயில் அருகே கடந்த அக்.30 அன்று இளம்பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது செயின் பறிப்பு நடந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரைச் சார்ந்த செல்வம் என்கிற செல்வமுருகன் என்பவரைக் கைது செய்தனர்.

இந்த செல்வ முருகன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும்,  இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து வடக்குத்து பகுதிக்கு குடிபெயர்ந்தாக கூறப்படுகிறது. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்து வந்த செல்வமுருகன், முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு நெய்வேலியில் நடந்த ஒரு மோதலில் முதன்முதலாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பகண்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருட முயற்சித்ததாக  வழக்கும், 2017 ஆம் ஆண்டு இருசக்கர வாகன திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு மற்றும் கரோனா தொற்று காலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் வழக்கு என பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26ல் பெண் ஒருவர் அணிந்திருந்த செயினை பறித்ததாக நெய்வேலி நகரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட செல்வமுருகனிடம் இருந்து ஒரு பவுன் தங்க சங்கலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, விருத்தாச்சலம் கிளை சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார். 
அவர்கள், செல்வமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 5) நள்ளிரவு உடல்நலக் குறைவின் காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், கடந்த 2 - ம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின்பு, அதிகாரிகள் செல்வமுருகனை விருத்தாச்சலம் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றிருந்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் கடந்த 04-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாக கூறி செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போதுதான் அங்கு அவர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம், நல்ல உடல்நிலையில் இருந்த செல்வமுருகனை அக்.28 அன்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரது கைது குறித்து தகவல் எதையும் அவரது குடும்பத்தினருக்குத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா கூறுகையில், ''நாங்கள் பல இடங்களில் என் கணவரைத் தேடினோம். ஸ்டேஷனில் விசாரித்தபோதும் தகவல் தரவில்லை. கணவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்தும் புகாரை ஏற்கவில்லை. இந்நிலையில் நல்ல உடல் நிலையில் இருந்த என் கணவர் திடீர் மரணம் என போலீஸார் தகவல் தருகின்றனர். வலிப்பு நோயால் இறந்ததாகச் சொல்கின்றனர். அவருக்கு வலிப்பு நோய் இருந்ததே இல்லை. அவர் உடலை வாங்கச்சொல்லி என்னை வற்புறுத்துகின்றனர். என் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் செல்வமுருகன் மரணம் தொடர்பான தகவலை தமிழக அரசு, டிஜிபி, தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் உள்ள புலன் விசாரணைப் பிரிவு டிஜிபிக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.