வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து கணவன் பணம் அனுப்பிய நிலையில், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆடம்பரமாக வாழ்ந்து செலவழித்து விட்டு, வீட்டில் கொள்ளை நடந்து விட்டதாக கணவனிடம் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த அல்லா பிச்சை என்பவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில், தனது மனைவி மூமினா பானுவை வீட்டில் விட்டு விட்டு, வேலைப் பார்த்து பணம் சம்பாதிப்பதற்காக, வெளிநாடு சென்றிருந்தார். அங்கு, பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உழைத்து வேலை பார்த்து பெற்ற சம்பளத்தை, மதுரையில் உள்ள தனது மனைவிக்கு மாதம் மாதம் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்து உள்ளார். ஆனால், அவரின் மனைவி மூமினா பானு, கணவன் அனுப்பி வைக்கும் பணத்தைச் சரியாக சேமிக்காமல்,  மிகவும் ஆடம்பரமாகச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. தன் விரும்பியதைச் சாப்பிட்டு, ஒரு கோடிஸ்வரியைப் போல், இஷ்டம் போல் வாழ்ந்து வந்ததாகக் 
கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த பெண்ணின் கணவர் அல்லா பிச்சை, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான மதுரை திரும்பி உள்ளார்.

ஊர் திரும்பிய கணவன் அல்லா பிச்சை, “தான் வேலை பார்த்து அனுப்பிய பணத்தைப் பற்றி மனைவியிடம் கணக்கு கேட்டு, அந்த பணத்தைத் திருப்பி கேட்டதாக” தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி சமாளிக்க முடியாமல், தன் கணவனிடம் சண்டைக்குச் சென்று உள்ளார்.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், கணவன் அனுப்பிய பணத்திற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் திக்குமுக்காடி நின்ற நிலையில், அவர் யோசித்து உள்ளார். அதன் படி, அந்த பணத்திற்குப் பதில் சொல்லும் வகையில், ஒரு புது திட்டத்தையும் அவர் தீட்டி உள்ளார்.

அதன் படி, கடந்த 4 ஆம் தேதி இரவு கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டில் உள்ள பீரோ மற்றும் கதவைத் திறந்து வைத்த மனைவி மூமினா பானு, துணிகளைக் கலைத்துப் போட்டு விட்டு, வீட்டில் கொள்ளை நடந்து உள்ளதாக கூச்சலிட்டு கணவனிடம் நாடகம் ஆடி உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் கணவன் “என்னவெல்லாம் திருட்டுப் போய் உள்ளது?” என்று தன் மனைவியிடம் கேட்டு உள்ளார்.

அதற்கு அவரின் மனைவியோ, “வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 6 சவரன் நகைகளையும் திருடிச் சென்று விட்டதாக” கூறி அழுது நடித்து உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக அங்குள்ள புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், “கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை அல்லா பிச்சையின் மனைவி மூமினா பானு, ஆடம்பரமாகச் செலவழித்து உள்ளார் என்றும், அந்த கணக்கை சரிக்கட்டவே, இரவு நேரத்தில் கணவர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பீரோ மற்றும் கதவைத் திறந்து வைத்த மூமினா பானு, துணிகளைக் கலைத்துப் போட்டு விட்டு வீட்டில் கொள்ளை அரங்கேறியது போல நாடகமாடியதும்” தெரிய வந்தது

இதனையடுத்து, பொய்யான புகார் கொடுத்துக் காவல் துறையின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக அல்லா பிச்சை, அவரது மனைவி மூமினா பானு ஆகிய இருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.