தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படங்களின் வரிசையிலும் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியலிலும் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒரு திரைப்படம் சூரரைப்போற்று.  இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா கையிலெடுத்த  ஒரு சிறந்த கதைக்களம்.SIMPLIFLY DECCON  நிறுவனர் கேப்டன் கோபிநாத் அவர்களின் சுயசரிதை.

ஒரு சுயசரிதையை  படமாக்கினாலும் நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக காட்சிகளை அமைத்து படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.நடிகர் சூர்யா கேப்டன் கோபிநாத் அவர்களின் கதாப்பாத்திரமான நெடுமாறன் ராஜாங்கம் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பட்டியலில் இடம்பெற்ற சூரரைப்போற்று திரைப்படம், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்  இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அனைத்திற்கும் மேலாக தற்போது உலக அரங்கில் ஒரு பெரிய சாதனையை செய்துள்ளது சூரரைப்போற்று உலக அரங்கில் சிறந்த திரைப்படமாக அதிக மக்களால் ரசிக்கப்படும் திரைப்படங்களை  பட்டியலிடும்  ஆன்லைன் டிஜிட்டல் நிறுவனமான IMDb-ல்  சூரரைப்போற்று திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களான தி ஷஷங்க் ரீடம்ப்ஷன் மற்றும் தி காட் ஃபாதர் திரைப்படங்கள் முதல்   இரண்டு இடங்களில் இருக்க மூன்றாவது திரைப்படமாக சூரரைப்போற்று தற்போது இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக ஒரு இந்திய திரைப்படம் டாப் 10 வரிசையில் இடம் பிடிக்கிறது. அதுவும் முதல் மூன்று திரைப்படங்களில் ஒன்றாக சூரரைப்போற்று இடம் பிடித்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

சூரரைப்போற்று திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த அத்தனை பெருமைகளும் பாராட்டுகளும் ரசிகர்களான உங்களையே சாரும்” என ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் சூரரைப்போற்று திரைப்படம்  தினம் ஒரு சாதனை புரிந்து வருகிறது.