வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தி வரும் நிவர் புயல், வங்கக்கடலில் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த புயல், இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இதன் கன மழை கொட்டித் தீர்க்க உள்ளது. அத்துடன், புயல் காற்றும் பெருமளவில் வீசக்கூடும் என்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல், சென்னைக்கு அருகே 470 கி.மீ தொலையில் மையம் கொண்டுள்ளது. 

இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல், நாளை பிற்பகல் நேரத்தில் சென்னை மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதன் காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு மணி நேரத்திற்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகருவதால், நாளை மாலை தான் கரையைக் கடக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அதன் படி, சென்னையில் தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கன மழை மீண்டும் கொட்டி தீர்த்து வருகிறது. 

அதே போல், சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், அண்ணா சாலை, மவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 

இதனால், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில், தற்போது நீர்மட்டம் 21.22 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்கள் தண்ணீர் வருவது சற்று குறைந்து இருந்திருந்தது. ஆனால், நேற்று இரவு முதல் சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் வரும் அளவு தற்போது மீண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி உள்ளதால், தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

நிவர் புயல் காரணமாக, சற்று முன்பு வரை கடலூரில் 13.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனையடுத்து, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து 120 பேர் அடங்கிய 6 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தற்போது கடலூர் விரைந்து உள்ளனர். 

முக்கியமாக, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை, பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி அளித்தார்.  

அதே போல், புயல் மற்றும் கனமழை எதிரொலியாக நவம்பர் 25, 26, 27 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த MBBS, BDS படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது  ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 15, 17, 19 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், புயல் காரணமாக, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்வது குறித்து தெற்கு ரயில்வெ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.