ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. 

கொரோனாவின் இந்த 2 வது அலையின் வேகமானது, தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாகக் காணப்பட்டது. முக்கியமாக, நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தைக் கடந்து காணப்பட்டன. 

இப்படியான நிலையில் தான், கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கொரோனா தொற்று எண்ணிக்கையானது தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து காணப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது முழு திருப்தி அளிக்கவில்லை” என்று, குறிப்பிட்டார். 

“எனவே, கொரோனா தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31 ஆம் தேதியில் இருந்து ஜூன் 7 ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும்” என்றும், உத்தரவிட்டார்.

“தமிழகத்தில், தற்போது நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து நேற்று முன் தினம் 24 ஆயிரமாகக் குறைந்து காணப்பட்டது என்றும், படிப்படியாக அதிகரித்து உச்ச நிலையை எட்டியுள்ள கொரோனா பரவலை, கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது” என்றும், என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகே, “தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தின் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு குறித்து தற்போது கருத்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 7 ஆம் தேதி முதல், ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது.

“தமிழ் நாட்டில் தற்போது நோய் தொற்று பரவலாகப் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது” என்றும், கவலையுடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“எனவே, இந்த மாவட்டங்களில் நோய் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதே சமயம் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

“ஆனால், இந்த 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கூடுதலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக” தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்பாக, “கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.