சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் 2 வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் முன்பைவிட தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டாலும், இந்த கொரோனா என்னும் கொடிய நோய் மனிதர்களையும் தாண்டி, விலங்குகளுக்கும் பரவத் தொடங்கி இருக்கிறது.

அதன் படி, சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மொத்தம் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதில், கொரேனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.

இதனால், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் மற்ற விலங்குகளைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாகக் கடந்த 3 ஆம் தேதி கண்டறியப்பட்டது என்றும், சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அன்றைய தினமே உயிரிழந்தது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இதே போன்ற நிகழ்வுகள் ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் உத்தப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள பூங்காக்களில் உள்ள சிங்கங்களுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி இருப்பது தெரிய வந்திருக்கிறது” என்றும், கூறப்பட்டு உள்ளது.

“சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளால், உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தினரை கலந்தாலோசித்து, நோயுற்ற சிங்கங்களைக் குணப்படுத்தும் வகையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகளும் வழங்கப்பட்டன என்றும், கொரோனா தொற்றுக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்தியத் தேசிய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். நிசாத் என்ற ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது இருக்கிறது என்றும், அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ வல்லுநர்களைப் பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு அனுப்பியுள்ளது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

“இந்த குழுவானது, பூங்காவில் இருக்கும் இதர விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விலங்குகளைக் கையாளும் பணியாளர்கள் உரியப் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு கடந்த 3 ஆம் தேதி அன்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “சென்னை பூங்காவில் இருக்கும் விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. 

குறிப்பாக, “இந்த துறையின் அலுவலர்கள் இது தொடர்பாகத் தேசிய அளவில் உள்ள துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்து ஆலோசனை செய்து வருகின்றனர்” என்றும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.