2 வது மனைவியின் கள்ளக் காதல் விவகாரத்தில் விரக்தி அடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சார்லஸ் ராஜ்குமார், கூலி தொழிலாளியாக அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சார்லஸ் ராஜ்குமாருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முறையாகத் திருமணம் ஆகி உள்ளது. ஆனால், திருமணம் ஆன அடுத்த சில மாதங்களில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இருவருக்குள்ளும் அன்றாடம் சண்டை வந்துள்ளது. 

கணவன் - மனைவி இருவருக்குள்ளும் சண்டை தொடர்ந்து அதிகரிக்கவே, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்படி, அவரது மனைவி, அவரின் தாயார் வீட்டிற்குச் சென்ற நிலையில், சார்லஸ் ராஜ்குமார் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன் வீடு இருக்கும் எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த தன்னை விட 4 வயது கூடுதலான, அதாவது 35 வயதான ரமணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் படி, அவர்கள் இருவரும் பழகி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ரமணியை 2 வதாக சார்லஸ் ராஜ்குமார், முறைப்படி திருமணம் செய்துகொண்டார். சார்லஸ் ராஜ்குமாரின் 2 வது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்கள் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசத் தொடங்கி உள்ளது.

அதாவது, மனைவி ரமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சார்லி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல், எப்படியோ கணவர் சார்லஸ் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தன் மனைவி ரமணியை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே, பிரச்சனை எழுந்துள்ளது.

மேலும், தன் கணவருடன் சண்டை போட்ட ரமணி, கோபித்துக்கொண்டு, தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மனைவியை அவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை மனைவி ரமணியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற கணவர் சார்லஸ் ராஜ்குமார், அவரது பெற்றோரிடம் சமாதானம் பேசி, மனைவி ரமணியை தன் வீட்டிற்குக் கூட்டு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், கணவன் - மனைவி இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த சார்லஸ் ராஜ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரமணியை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, மனைவி இறந்த பிறகு, அங்கேயே சிறிது நேரம் இந்த சார்லஸ் ராஜ்குமார், அதன் பிறகு எம்.கே.பி நகர் காவல் நிலையம் சென்று சரண் அடைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சார்லஸ் ராஜ்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், 2 வது திருமணமும் இப்படி ஏமாற்றத்தில் முடிந்துள்ளதே என்ற  விரக்தியில் மனைவியைக் கொலை செய்ததாக” சார்லஸ் ராஜ்குமார் கூறியதாகத் தெரிகிறது. மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.