சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியும், விடாமல் துரத்திய சாதி பிரச்சனையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, பவித்ரா என்ற இளம் பெண்ணை அரவிந்த் காதலித்துள்ளார். பதிலுக்கு அந்த பெண்ணும் அரவிந்தை காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

காதலிக்கும் போது, சாதியைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரும் வேறு வேறு சாதி என்பதால், இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், சற்று யோசித்த அந்த காதல் ஜோடி, இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இந்து முறைப்படி கோயில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, பவித்ராவின் பெற்றோர் அந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடாமல் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி அந்த தம்பதியினர் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, எல்லா குடும்பத்தில் வருவது போன்று, அரவிந்த் - பவித்ரா குடும்பத்திலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பிரச்சனையில், அரவிந்திடம் கோபித்துக்கொண்ட பவித்ரா, அவரது அம்மா வீட்டிற்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.

பவித்ராவின் பெற்றோரும், இது தான் சரியான தருணம் என்று நினைத்து, தங்களது மகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு, அரவிந்துடன் அனுப்ப மறுத்துவிட்டனர். அரவிந்த் எவ்வளவோ போராடிப் பார்த்துள்ளார். ஆனாலும், பலன் இல்லை. 

மேலும், தங்கள் மகள் பவித்ராவிற்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். அதன்படி, பவித்ராவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலாம் நடந்துள்ளது. 

தனக்கு 2 வது திருமணம் என்ற தகவலைக் கேள்விப்பட்ட பவித்ரா, கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த, தனது பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனாலும், பலன் அளிக்க வில்லை. பவித்ராவையும் மீறி திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

மற்றொரு புறம் அரவிந்திடமிருந்து, பவித்ராவின் பெற்றோர் விவகாரத்து கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது தான், “கணவனிடம் சண்டைபோட்டு விட்டு, தான் அம்மா வீட்டிற்கு வந்தது எவ்வளவு பெரிய தவறு” என்று, பவித்ரா நினைத்துள்ளார்.

ஒரு பக்கம் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், மறுபுறம் தன் விருப்பம் இல்லாமலே தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் கோபத்திலும் அவர் இருந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா, கடந்த 15 ஆம் தேதி, தன் அம்மா வீட்டிலேயே பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்ட கணவன் அரவிந்த், வேதனையில் கதறி உள்ளார். அத்துடன், மனைவியின் முகத்தைப் பார்க்க அரவிந்த் முயன்றுள்ளார். ஆனால், அவர் முகத்தை கூட பார்க்க பவித்ராவின் பெற்றோர் மறுத்ததாகத் தெரிகிறது.

இறந்த மனைவியின் முகத்தைக் கூட பார்க்காத விரக்தியிலிருந்த கணவன் அரவிந்த், கடந்த ஒரு வார காலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதன்படி, அவரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். 

அதன்படி, ஒரு கடிதம் எழுது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். அந்த பதிவில், “நானும் ரொம்ப லவ் பண்ணி, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால், என் மனைவி கடந்த 15 ஆம் தேதி செத்துட்டா. நான் அவ முகத்தைக் கூட பார்க்கல. மன் மனைவி வீட்டில் என்னைப் பார்க்க விடல.

அவ இல்லாம இருக்க முடியல. அதனால, நானும் அவகூடவே போறேன். எங்க சாவுக்கு காரணம் பவியின் அம்மா, மாமா பலராமன்” தான் என்றும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். 

அத்துடன், அவரது காதல் வாழ்க்கையை நினைவு கூர்ந்தும் போட்டோ ஒன்றையும், அதில் அரவிந்த் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அரவிந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் புயலைக் கிளப்பி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் தற்கொலைக்குத் தூண்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சாதி விட்டுச் சாதி கல்யாணம் பண்ணியும், விடாமல் துரத்திய சாதி பிரச்சனையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.