கொரோனா பரவலின் காரணமாக, கடந்த பல மாதங்களாகத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கோடு சேர்த்து, போக்குவரத்து தொடர்பான முடக்கங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஆங்காங்கே தளர்வு மத்தியிலான ஊரடங்கு, பாதிப்பு அதிகமிருக்கும் பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமலிலிருந்து வருகின்றது. இந்த ஊரடங்கு காலமானது, தமிழகம் 122 நாட்களாக இருந்து வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த நாள்களில், ஊரடங்கு விதிகள், குறிப்பாகப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிறைய இடங்களில் அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. அப்படி, இதுவரை ரூ.18.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 122 நாளில் 8,07,214 வழக்குகள் பதிவு செய்து 8,87,566 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6,46,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக இன்று வரை ரூ.18,57,32,111அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறை சார்பில் இந்தத் தகவல்கள் யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31-ம்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க,அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 

இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டி இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டும், கடந்த ஞாயிறன்று 193 இடங்களில் போலீஸார் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம், அத்தியாவசிய காரணங்கள் இன்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். போலீஸாரின் தீவிர கண்காணிப்பால், முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே நிலைதான், தமிழகம் முழுவதுமே நிலவிவந்தது.

தமிழகம் மட்டுமன்றி, தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய இடங்களிலும்கூட, முழு ஊரடங்கு நீடித்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது. தமிழக எல்லையான ஜூஜூவாடியில், பிற மாநிலத்தில் இருந்து, இ -பாஸ் அனுமதியுடன் வந்த அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. 

கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்தவரை ஜூலை 14 இரவு, 8:00 மணி முதல், இன்று ஜூலை 22 அதிகாலை, 5:00 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கால், இரு மாநில எல்லையில் பலத்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த தீவிர முழு ஊரடங்கு யாவும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இருப்பதும், பிற நாள்களில் தளர்வுகள் இருப்பதாலும்தான் இந்தளவுக்கு அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இன்னொரு பக்கம், `இந்தளவுக்கு அதிக அபராதம், பொதுமக்கள் அதிகம் வெளியில் வருவதையே காட்டுகிறது. இப்படி மக்கள் அதிகம் வருவது, கொரோனாவை அதிகப்படுத்துவதற்கான வழி. முடிந்தவரை அனைவரும் வீட்டிலிருக்கப் பயில வேண்டும்' எனக்கூறுகின்றார்கள் மருத்துவர்கள்.

- பெ.மதலை ஆரோன்