கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்குத் தமிழக அரசுக்குப் பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்து “எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் கடவுளான முருகப் பெருமானைப் போற்றி வழிபடும் பக்தர்கள் அனைவரும், 'கந்த சஷ்டி கவசத்தை' மன முருக பாடி வழிபாடு செய்வது தமிழர் மரபு. 'கந்த சஷ்டி கவசத்தை' மன முருக பாடி வழிபாடு செய்வதால், மனதுக்குள் உள்ள இனம் புரியாத பயம் அனைத்தும் நீங்கி, அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். அதேபோல், தமிழகத்தில் முருகப் பெருமானை வணங்காத இந்து மத பக்தர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் பிறசித்து பெற்ற முருகப் பெருமான் பற்றிக் கடந்த வாரம் விமர்சனங்கள் எழுந்தது.

அதாவது, முருகப் பெருமானைப் போற்றிப் பாடும் 'கந்த சஷ்டி கவசத்தை' விமர்சனம் செய்து, 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனல் ஒன்று அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டது.  

இந்த விமர்சன வீடியோவானது, இந்துக்களின் மனை காயப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், முருக பக்தர்களின் வழிபாட்டு முறையைக் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் மிகப் பெரும் சர்ச்சைகள் வெடித்தது.

இதனால், அனைத்து தரப்பு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து, 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், வீடியோ வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

அத்துடன், சம்மந்தப்பட்ட 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனலை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கொரோனா ஊரடங்கையும் மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனலில் முருகப் பெருமான் பற்றி வீடியோ வெளியிட்ட செந்தில்வாசன், சுரேந்திரன் 2 பேர் முதலில், போலீசாரிடம் சரணடைந்தனர். அப்போது, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அதன் பிறகு, மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 4 பேரை வரை கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இதில் தலையிட்ட தமிழக அரசு, 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனலை முடக்குவதா அறிவித்தது. இதனையடுத்து, சென்னையில் உள்ள 'கருப்பர் கூட்டம்' அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, 'கருப்பர் கூட்டம்' யூடியூப் சேனலில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் இருந்ததால், அந்த சேனலில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில், 'கந்த சஷ்டி கவசத்தை' அவதூறு பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அந்த பதிவில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்திக் கொந்தளிக்கச் செய்துள்ளனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகத் தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்றும், பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்” என்றும், நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இறுதியாக, “எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்றும், தனது டிவிட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.