முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு நிமிக்கப்பட்டுள்ளது, இந்தியாவையே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தமிழகத்தின் 16 வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “வணக்கம்” என்று, தமிழில் பேசத் தொடங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்” என்றும், அவர் தமிழ் மொழியின் புகழ் பாடினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இன்றைய உரையில் பல்வேறு சிறப்பம்சங்கள், தமிழக அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் என்று, எல்லாமே மிக முக்கியமான பல அமசங்கள் நிறைந்திருந்தன.

அதில், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், “தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும்” என்று, இதில் இடம் பெற்றது தான் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து உள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கும் இந்தக் குழுவில், உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம்; இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்து உள்ளது என்றும், இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற தமிழக அரசு உறுதி செய்யும்” என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்று பார்க்கும் போது, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறந்த பொருளாதார மேதைகள் இடம் பெற்றுள்ளது தனிப் பெரும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

5 பேர் கொண்ட குழுவில் யார் யார்?

- ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர். 

- எஸ்தர் டப்ளோ, நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர்.

- அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்.

- ஜீன் ட்ரெஸ்,  ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்.

- நாராயணன், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர்.

என உலகின் மிக முக்கியமான பொருளாதார மேதைகள் இந்த 5 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

அதன் படி, இவர்களது பணியானது, பொருளாதார நிலையை ஆராய்ந்து, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனைகளை அளிக்க உள்ளனர்.