நடிகை சாந்தினி பாலியல் வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், ஒரு தனிப்படை மதுரைக்கும் மற்றொரு தனிப்படை ராமநாதபுரத்திற்கும் விரைந்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக, துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார். 

அந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக
என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

நடிகையின் இந்த பாலியல் புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, “முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து” நடிகை சாந்தினி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

ஆனால், நடிகை சாந்தினி தாக்கல் செய்த மனு, அப்போது பார்வைக்கு வராத நிலையில், வழக்கு 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 9 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, “மணிகண்டனுக்கு எதிராகத் துணை நடிகை, மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளதால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அவருடைய முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும், காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் எந்த உத்தரவு பிறப்பிக்காமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி மீண்டும் அந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, “முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக” கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து, அதிரடியாக உத்தரவிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க தற்போது 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ள நிலையில், மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசாரிடம் விவரங்கள் சேகரிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள்  ராமநாதபுரத்திற்கும் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எப்போதும் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.