தென்னிந்திய திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பிறகு நடிகர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக திகழும் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான காஞ்சனா 2 திரைப்படத்தின் சில்லாட்டா பில்லாட்டா அறிமுக பாடலில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எல்வின் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு அவர்கள் தனது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் எல்வின் உடன் இணைந்து தமிழ் திரையுலகின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர், இயக்குனர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னொரு மாஸ் ஹீரோவும் இக்கூட்டணியில் இணையவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. விரைவில் இத்திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு  தயாரிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மரகத நாணயம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பே வெளியான நிலையில் மரகதநாணயம் பார்ட் 2 அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.