தமிழகத்தில் ஊரடங்கின்போது, “பேருந்து சேவைகளுடன் மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா?” என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 

அதன் படி, தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. இதனால், வாரம் வாரம் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளித்து தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவானது, வருகிற 21 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, தற்போது படிப்படியாகக் குறைந்து காணப்பட்டதால், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன் சில அடிப்படை பணிகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. 

மேலும், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று கூடுதலாகப் பதிவாகி வருவதால், இந்த 11 மாவட்டங்களில் மட்டும் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன.

எனினும், கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அத்திவாசிய பணிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

 இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க, தமிழக போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இது தொடர்பான முறையான அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளைய தினம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனையில், கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகளை அறிவிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

குறிப்பாக, பொதுப் போக்குவரத்து, சிறிய ஜவுளிக் கடைகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பித் தொடங்கி உள்ளனர்.