நேற்றய தினம் வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிந்து விட்டது. இதனால் அரசின் கோப்புகளை இனி அதிகாரிகள் கிடப்பில் போட்டு விடுவர். அனைவரையும் இது பாதிக்கும்" என்று கூறியிருந்தார்.

மேலும் ``திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எம்.எல்.ஏ தேர்தலில் சீட்கள் போதவில்லை என வெளியேறுவர். அங்கே இருக்கும் சிலரும் திமுக கூட்டணிக்கு வருவர். இது சகஜம் தான். இதனால் திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது" என்றும் கூறியிருந்தார் துரைமுருகன். 

துரைமுருகன் இந்தப் பேச்சு, பல அரசியல் விவாதங்களை தற்போது எழுப்பியுள்ளது. துரைமுருகன் யாரை சொல்கிறார்? யார் வெளியேறுவர்? யார் கூட்டணிக்குள் வருவர்? என்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், பெரும்பாலானோர், பாமகவைதான் துரைமுருகன் சொல்லி இருப்பார் என்று அனுமானமாக சொல்கிறார்கள். ஏனென்றால், திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த கையுடன் பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என துரைமுருகன் முயற்சிப்பதாக ஒரு செய்தி கசிந்தது. 

காரணம், கடந்த எம்பி தேர்தலின்போதும், பாமக தரப்பு திமுகவுடன் இணைய காத்திருந்தது. ஆனால் துரைமுருகன் பேச்சுவார்த்தையில் இறங்காமல், கட்சி மேலிடம் சொந்த தரப்பை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மேலும் வேறு சில காரணங்களுக்காக கூட்டணியில் இருந்து பின்வாங்கியதாகவும் முணுமுணுக்கப்பட்டது. ஒருவேளை துரைமுருகன் அப்போதே களத்தில் நேரடியாக இறங்கியிருந்தால், இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். அதனால், இந்த முறையேனும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக துரைமுருகனே பாமக தரப்பை இழுக்கும் முயற்சியை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. 

அப்போது ஒரு சில கண்டிஷன்களை பாமக தரப்பில் போட்டதாகவும், அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று துரைமுருகன் நம்பிக்கை சொன்னதாகவும் கூறப்படுகிறது. வடமாநிலம் வன்னிய சமுதாய வாக்குகளை துரைமுருகன் ஓரளவு பெற்றுவிடுவார் என்றாலும், வடமாநில பெல்ட்டை மொத்தமாக வளைக்க பாமக தங்களுடன் இருப்பதுதான் சரியென்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க அது வசதியாக இருக்கும் என்றும் ஸ்கெட்ச் போடப்பட்டு வருகிறது.. திமுக தரப்பு மீது ஒருசில அதிருப்தி பாமக தலைமைக்கு இருந்தாலும், ஒரே சமுதாய உணர்வின் அடிப்படையில் துரைமுருகனை எப்போதுமே பாமகவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதுவொரு பக்கம் இருக்க, தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீர்மானக் குழு உறுப்பினர்களாக ஆ.நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி துணைச் செயலாளராக அன்னியூர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்"

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகண்ணப்பன் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு வகித்தபோது அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.