மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் இணைந்து சில தினங்களுக்கு முன் (செப் 28) ஆர்ப்பாட்டம் நடத்தின. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு அதை ஆதரித்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய கடந்த செப்.21 ஆம் தேதி அன்று தோழமைக் கட்சிகளுடனான கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தினார்.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக், தி.க.தலைவர்கள் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், மாநில அரசு அதை ஆதரிப்பதைக் கண்டித்தும், சட்டத்தைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பாக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி செப் 28 ம் தேதி, காலை தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் மாவட்ட, நகரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டி.கே.எஸ்., உள்பட 140 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் இரண்டு தினங்களுக்கு முன் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ் படியாமை, தொற்று நோயை பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல், கடலூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் எம்பி உள்பட 250 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த போராட்டத்தில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கந்தன்சவாடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஆட்சியர் அலுலகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனன் ஆகியோரின் தலைமையில் திமுகவின் தோழமை கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்படி கலந்துக் கொண்டவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து சென்னை முழுவதும் 25 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, கே.எஸ்.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், பாலகிருஷ்ணன் மற்றும் 3500 பேர் மீதும், சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல், தொற்றுநோயை பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், ஊரடங்கு விதியை மீறுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.