திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார். 

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்த படத்தில் பார்வதி ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. இதில் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் சமீபத்தில் துவங்கியது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். விரைவில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது. அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே படத்தின் ரிலீஸ் பற்றி தெரியவரும். 

மாதவன் கைவசம் ராக்கெட்ரி திரைப்படம் கைவசம் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் படத்தில் நடித்துள்ளார் மாதவன். கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அஞ்சலி ஆகியோர் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா  ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த படம் அக்டோபர் 2-ம் தேதியான இன்று உலகளவில் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் பேசிய நடிகர் மாதவன், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனாவிடம் பேசிய அவர், இந்த ஐபிஎல் மக்களின் துயர் நீக்கும் விதமாக இருக்கிறது. மக்கள் இல்லாத குறை தெரியுதே தவிர, உற்சாகம் குறையவே இல்லை. அதிக பட்ச ரன்-சேஸ் இருந்தது. மேலும் ஐபிஎல் போட்டிகளை தயாரித்த விதம் அருமையாக இருந்தது. பின்னணியில் ரசிகர்களின் சவுண்ட் எல்லாம் சேர்த்த விதம் பாராட்டும் வகையில் இருந்தது என்று பேசியுள்ளார்.