இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பொருளாதார இழப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதால், ஊரடங்கு தளர்வுகளும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தளர்வின் ஒருபகுதியாக, இன்றைய தினமும் சில அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதில் முக்கியமானதாக 
கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சென்னை புறநகர் ரயில் சேவை பற்றிய அறிவிப்பொன்று இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பு இதுதான் - `தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னையில் அக்டோபர் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை துவங்கும்'. இதை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை இயங்கும் என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில் சேவைகள் இயங்கும் என்பது, ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு இருமுறை சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சோதனை ரயில்வே காவல்துறை அல்லது பாதுகாப்பு படையினரால் ரயில் நிலைய நுழைவாயிலில் நடத்தப்படும். அடுத்த சோதனை டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும். அதேபோல, ஒரு முறைப்பயணம் அல்லது சீசன் டிக்கெட்டுகளை பணியாளர்கள் புறநகர் ரயில் நிலையங்களில் யூ.டி.எஸ். மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ரயில்களில் பயணிக்க நோடல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை புறநகர் ரயில் சேவைக்கு மட்டும் இதுநாள்வரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட ஐந்தாம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் புறநகர் ரயில் சேவைக்கான தடை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்திருந்த ரயில் பயணிகளுக்கு சற்று ஆறுதலான செய்தியை தெற்கு ரயில்வே இன்று (அக்.2) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் மட்டும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். புறநகர் ரயில் சேவையை பெற விரும்புவோர், தாங்கள் அத்தியாவசியப் பணியில் இருக்கிறோம் என்பதற்கான தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெற்கு ரயி்ல்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டிக்கும் வேறு சில அறிவுரைகள், இங்கே...

1. ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது அதன் மொபைல் செயலி மூலம் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஒருவேளை டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரத்து செய்ய முடியும்.

 2. ரயிலில் கேட்டரிங் சேவை இனி கிடைக்காது. பேக் செய்யப்பட்ட பொருட்கள் , சாப்பிடத் தயாராக உள்ள சில உணவுகள், பாட்டில் குடிநீர், தேநீர், காபி மற்றும் பானங்கள் ஆகியவை மட்டுமே கிடைக்கும். மேலும் வரையறுக்கப்பட்ட ரயில்களிலும், ஸ்டேஷன் கேட்டரிங் யூனிட்களிலும் இவைகளை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அரசிடம் இருந்து மறு அறிவிப்பு ஒரு வரை ரயிலில் உணவுகள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் சொந்த உணவு மற்றும் குடிநீரை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 

3. பயணம் செய்யும் ஒவ்வொருவரும் ரயில் நிலையத்திற்குள் நுழைவது முதல் பயணத்தின் இறுதி வரை எப்போதும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் வெப்பத் திரையிடல் மற்றும் டிக்கெட் சோதனைக்கான நீண்ட வரிசையை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே நிலையத்திற்கு வந்தடைய அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கியமாக நோய் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்

4. படுக்கை மற்றும் திரைச்சீலைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ரயிலுக்குள் இனி வழங்கப்படாது என்பதால் பயணிகள் தங்களது சொந்த துணி மற்றும் போர்வைகளை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5. பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயில்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். மேலும் இலக்கை அடைந்த பிறகு, பயணிகள் இலக்கு நிலை / யூடி பரிந்துரைத்தபடி சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

6. குறிப்பாக பயணிகள் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.