கள்ளக் காதலனை அடைய, கர்ப்பிணி பெண் உள்பட 2 பெண்களை கள்ளக் காதலி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி அடுத்து உள்ள மச்சே கிராமத்தைச் சேர்ந்த கங்கப்பா என்பவருக்கும், இவரது மனைவி 23 வயதான ரோகினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, ரோகினி தற்போது கர்ப்பமாக இருந்தார். இன்னும் சில மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருந்தது. 

இந்நிலையில் தான், 23 வயதான கர்ப்பிணி பெண் ரோகினி கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதாவது, கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ரோகினியின் கணவர் கங்கப்பாவிற்கும், அங்குள்ள பெலகாவி அருகே இருக்கும் கலேநட்டி கிராமத்தைச் சேர்ந்த 

35 வயதான கல்பனா பசரிமாரா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

அப்படிப்பட்ட நிலையில் தான், கடந்த ஆண்டு, கங்கப்பா இளம் பெண் ரோகினியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கங்கப்பா தன் கள்ளக் காதலி கல்பனா உடனான கள்ளக் காதலை முற்றிலும் தவிர்த்து வந்து உள்ளார்.

ஆனால், கள்ளக் காதலி கல்பனாவல் தன்னுடைய கள்ளத் தொடர்பை கை விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, கள்ளக் காதலன் கங்கப்பா, விலக விலக அவர் மீதான கள்ளக் காதல் மோகம் மேலும் மேலும் கல்பனாவிற்கு அதிகரித்து வந்துள்ளது.

மேலும், மனைவி ரோகினியால் தான், காதலன் கங்கப்பா தன்னை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக நினைத்த காதலி கல்பனா, ரோகினியை கொலை செய்து விட்டால், காதலன் கங்கப்பா தனக்குத் தான் சொந்தம் என்று தப்பாக யோசித்து, அதன் படி ரோகினியை கொலை செய் திட்டம் தீட்டி உள்ளார்.

அத்துடன், ரோகினியை கொலை செய்வது தொடர்பாக தனது உறவினரான மராட்டியத்தைச் சேர்ந்த மகேஷ் நாயக், பெலுகுந்தியை சேர்ந்த ராகுல் பட்டீல், கணேஷ்பூரை சேர்ந்த ரோகித் வாடர், கலேநட்டியை சேர்ந்த ஷானூர் பன்னா ஆகிய 4 பேரிடமும் கல்பனா உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து, அவர்கள் 5 பேரும் சேர்ந்து ரோகினியை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

அதன்படி, கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்ப்பிணியான ரோகினி, தனது உறவினரான 21 வயதான ராஜஸ்ரீ பன்னூர் என்ற இளம் பெண்ணுடன் தனது கிராம எல்லையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நிறைமாத கர்ப்பிணி ரோகினி மற்றும் ராஜஸ்ரீ பன்னூர் ஆகிய 2 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்து உள்ளனர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 

இப்படி, துளியும் ஈவு இரக்கமின்றி கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், இந்த இரட்டை கொலை தொடர்பாகத் தனிப் படையும் அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், கள்ளக் காதலி கல்பனா உட்பட 5 பேரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கள்ளக் காதலனை அடைவதற்காக, கள்ளக் காதலனின் கர்ப்பிணி மனைவியை, கள்ளக் காதலியே கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, கொலையாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.