உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு, நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் ராகுல் காந்தியை போலீசார் சட்டையைப் பிடித்து தள்ளியதால், நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

ஹத்ராஸ் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு 144 தடையுரத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சில காங்கிராஸார் அங்கு செல்ல முயன்று, அவர்களும் அப்பகுதிக்கு செல்ல தடுக்கப்பட்டனர். இதுபற்றி அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நாங்கள் தனித்தனியாக சென்று ஆறுதல் கூற இருந்தோம். ஆனால் எங்களை ஏன் தடுத்தனர் என்று தெரியவில்லை. மிருகத்தனமான ராஜ்ஜியம் நடத்துகின்றனர். இன்னும் நாங்கள் 1.5 கி. மீட்டர் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்கே சென்று விடுவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

இந்தளவுக்கு ஒரு அரசாங்கம் பிரச்னையை மூடி மறைப்பதற்கான வேலைகளை செய்யுமா, அநீதி இழைக்குமா என எதிர்க்கட்சிகள் சராமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.

இதற்கிடையே தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. அது என்னவெனில், மாநிலத்தில் 144 பிறப்பிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை பத்திரிகையாளர்கள் கூட அனுக முடியாமல் இருக்கும் சூழல் நிலவுகின்றது. தொலைபேசி வாயிலாக அக்குடும்பத்தினரை ஊடகங்கள் அனுகினால், அந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. 

அப்படி ஒரு நிகழ்வாக, இந்தியா டுடே பத்திரிகையை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பெண் பத்திரிகையாளரை தொலைபேசி உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின் பேரில் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பெண் பத்திரிகையாளர்தான், உ.பி. அரசு அப்பெண்ணை பெற்றோரின் அனுமதியின்றி எரித்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலதுசாரி இயக்கத்துக்கு ஆதரவான ஒரு வெப்சைட்டில், குறிப்பிட்ட அந்த பெண் பத்திரிக்கையாளர்- உயிரிழந்த பெண்ணின் சகோதரருடன் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியாவிடம், இதுபற்றி இந்தியா டுடே கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், ``உங்களது பெண் பத்திரிகையாளர், எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் சகோதரருக்கு டியூசன் நடத்துகிறார். செய்திகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள்" என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்தியா டுடே நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

``பெண் நிருபரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் உரையாடும் ஆடியோ உங்களுக்கு எப்படி கிடைத்தது? இவ்வாறு நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் உரிமையை எந்த சட்டத்தின் கீழ் நீங்கள் எடுத்தீர்கள். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தாலும் அது பெரிய குற்றம் ஆயிற்றே. இதற்கு உங்களின் பதில் என்ன?" என்று கேட்டதற்கு மால்வியா பதிலளிக்கவில்லை.

இதற்கிடையே, இந்தியா டுடே ஊடக குழுமம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தங்கள் நிருபருக்கு தங்களின் நிறுவனம் ஆதரவாக இருப்போம் என்று தெளிவுபடுத்தி உள்ளது. நிருபரின் தொலைபேசி உரையாடல் அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதா என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். எதற்காக பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற விளக்கத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்படும் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பிக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி அடுக்கடுக்காக பல பிரச்னைகளும், திருப்பங்களும் ஹத்ராஸ் பெண் வழக்கில் ஏற்பட்டு வருகின்றது. உ.பி. அரசு மக்களின் குரலுக்கும், ஊடகங்களின் கேள்விக்கும் செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.