இந்திய திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வரும் நடிகர் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய திரை ரசிகர்கள் பெருமை படும் அளவிற்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். 

கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ பிரதர்ஸ் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பிரபலமானவர்கள்.

மார்வல் சூப்பர்ஹீரோ படங்களில் இன்ஃபினிடி சாகா என்று சொல்லப்படும் முதல் மூன்று கட்டங்களைச் சேர்ந்த திரைப்படங்களில் முக்கியமான நான்கு திரைப்படங்களை இயக்கியவர்கள் ரூஸோ சகோதரர்கள். இதில் கடைசியாக இவர்கள் இயக்கிய எண்ட் கேம், உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைப் படைத்தது.

இதைத் தொடர்ந்து, தார் கதாபாத்திரத்தில் நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நாயகனாக நடித்த எக்ஸ்ட்ராக்‌ஷன் என்கிற திரைப்படத்துக்கு ஜோ ரூஸோ திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இதன் பின் 'செர்ரி' என்கிற திரைப்படத்தை இருவரும் தயாரித்து இயக்கி வருகின்றனர். இந்தப் படம் அடுத்த வருடம் ஆப்பிள் டிவி+ வெளியீடாக வெளியாகிறது.

இதன் பிறகு தி க்ரே மேன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் கேப்டன் அமெரிக்கா-வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், லா லா லேண்ட், ஃபர்ஸ்ட் மேன் ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் இதில் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை டெட்லைன் என்கிற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தரப்பும் இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். 

தனுஷின் ஆரம்பகால திரைப்பயணத்தில் அவரை கேலி செய்யாதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக உருவ கேலி. ஒல்லியாக இருக்கிறார் இவரெல்லாம் ஹீரோவா ? என்று கிண்டலடித்த பலருக்கும் தனுஷ் தன் சாதனை ஓட்டத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார். முதலில் தேசிய விருது, அதனைத் தொடர்ந்து பாலிவுட், அதன் பிறகு The Extraordinary Journey of the Fakir எனும் ஆங்கில படம் என்று தொடர்ந்து தன்னை செதுக்கிக் கொண்டு வருகிறார். புகழ் பெற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனின் உடன் பிறப்பு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன்... அதனால் திரைப்பாதை எளிதில் அமைந்து விடும். இதில் என்ன ஆச்சர்யம் ? என்று குமுறும் பேர்வழிகளுக்கு தனுஷ் தனது உழைப்பால் அளித்த பதில் The Gray Man. உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்று நிரூபித்த நடிகர் தனுஷை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. Oscar வெகு தூரமில்லை தனுஷ்...