சமீப காலமாக ஓடிடி தளங்களின் ஈர்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்து கொண்டே வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் சில ஹாலிவுட் வெப்சீரிஸ்களுக்காகவும் ஹாலிவுட் திரைப்படங்களை பார்ப்பதற்காகவும்  நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் , ZEE5, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை  ரசிகர்கள் நாடினர். 

பிறகு திரையரங்குகளில் வெளியான சில தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு  இந்த ஓடிடி தளங்களின்  வாயிலாக  வெளியாகின. தற்போது நேரடியாகவே நிறைய தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக தியேட்டரில் கொண்டாட வேண்டும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம்-ல் வெளியானது. 

தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில்  ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மேலும் ஒரு பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளாதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

சோனி லிவ் ஓடிடி தளத்தில் முதலில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்களாக நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டனின் இயக்கத்தில் "கடைசி விவசாயி" , இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்த "நரகாசுரன்" ,  மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள "வாழ்" திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

வெகு நாட்களாக இந்த படங்களுக்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் இந்த படங்களின் வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகளும் தேதியும் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.