ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா. 

சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த பெண் சமந்தா. தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஹைதராபாத்தில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல்லாவரத்தில் காரில் சென்றபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமந்தா கூறியதாவது, நான் வளர்ந்த காலத்தில் என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் இந்த பல்லாவரம் மலை தெரியும். எனக்கு பிடித்த இடம். 

பிற மனிதர்களை விட என்னைப் பற்றி இந்த மலைக்கு தான் அதிகம் தெரியும். தேர்வு நாட்களின் காலையில் ஏற்படும் டென்ஷன், நான் கடவுளுக்கு செய்த சத்தியங்கள் ஆனால் அதை காப்பாற்றவில்லை...முதல் காதல்...காதல் முறிவு...தோழியின் மரணம்..கண்ணீர் மற்றும் குட்பைகள்...அதனால் தான் என் மலைக்காக தனியாக ஒரு போஸ்ட் போடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, உங்களுக்கு மட்டும் இல்லை பலருக்கும் முதல் காதல் தோல்வி தான். ஆனால் அந்த காதலை எப்பொழுதுமே மறக்க முடியாது. அது ஒரு சுகமான வலி என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்ததால் சமந்தா குஷியாகிவிட்டார்.