சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அடியெடுத்து வைத்து இன்று ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

சமீத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், தி கிரேட் இந்தியன் கிச்சன். இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் யதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். 

இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது இந்த படம். 

இந்நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இயக்குனர் ஆர். கண்ணன் இப்படத்தை இயக்குவார் என்றும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது. தியேட்டர் ரிலீஸுக்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்யப்பட்டு இப்படம் உருவாகும் என்றும், இரண்டு மொழிகளிலும் பரிட்சயமான நடிகர்கள் தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் படத்தில் நடிப்பார்கள் எனவும் தகவல் வெளியானது.

அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மோகன்தாஸ் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பூமிகா படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இயக்குனர் ரத்தின்திரன் ஆர். பிரசாத் இயக்கி வருகிறார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமாகும். ஹாரர் திரில்லரான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.