பாலிவுட் நடிகரும், இயக்குனருமான அனுராக் கஷ்யப், தயாரிப்பாளர்கள் விகாஷ் பெஹல், மது மான்டெனா, நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோரின் மும்பை வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். மும்பை மற்றும் புனேவில் சுமார் 20 இடங்களில் சோதனை நடந்திருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்ட அனுராக் கஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனமான ஃபேன்டம் ஃபிலிம்ஸ் தொடர்பாகத் தான் இந்த சோதனையாம். ஃபேன்டம் ஃபிலிம்ஸுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, மது மான்டெனா, விகாஷ் பெஹல் ஆகியோர் சேர்ந்து மும்பையில் ஃபேன்டம் ஃபிலிம்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அந்த நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியது.

பல படங்களை தயாரித்த நிலையில் விகாஸ் பெஹல் மீது முன்னாள் ஃபேன்டம் ஊழியை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்டது. ஃபேன்டம் ஃபிலிம்ஸ் நிறுவனம் 7 ஆண்டுகளாக செயல்பட்டது. அந்த நிறுவனம் தயாரித்த மன்மர்சியான் படத்தில் டாப்ஸி நடித்திருந்தார். மேலும் தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உள்பட பல பிரச்சனைகளுக்கு அனுராக் கஷ்யப்பும், டாப்ஸியும் குரல் கொடுத்து வந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.

அரசை விமர்சித்தால் ஐடி ரெய்டு தான் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடந்த ரெய்டை பார்த்தவர்களோ, பிரபலமாக இருப்பவர்களுக்கே இந்த கதியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

டாப்ஸி கைவசம் அன்னாபெல் சுப்ரமணியம் படம் உள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.