இந்திய சினிமாவிலேயே மிகச் சிறந்த திரைப்படங்களை  கொடுப்பதில் மலையாள சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மலையாள சினிமாவில் நிறைந்திருக்கும் யதார்த்தங்களும் அதில்  கொட்டிக்கிடக்கும் அழகியலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் சக்தி உடையது. தமிழகத்தில் மலையாள சினிமாக்களை பார்ப்பதற்கென்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம்  போன்ற OTT தளங்களில் தமிழ் ரசிகர்கள் அதிகமாக மலையாள சினிமாக்களை தேடிப் பார்ப்பதும்  நம்மால் காண முடிகிறது.

malayalam cinema screenplay writer dennis joseph passes away due to heart attack

இந்நிலையில் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான திரைக்கதை ஆசிரியரான டென்னிஸ் ஜோசப் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.மலையாள சினிமா பத்திரிக்கை ஒன்றில் பத்திரிக்கையாளராக தனது பணியை துவங்கிய டென்னிஸ் ஜோசப் 1987இல் மலையாள சினிமாவில் வெளிவந்த நிறக்கூட்டு திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து 45 திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் 5 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 

1980-90களில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த  பெருமையில் இவரது திரைக்கதைகளுக்கும் பங்குண்டு.கடைசியாக 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கீதாஞ்சலி திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருந்தார் டென்னிஸ் ஜோசப். 

நேற்று திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் டென்னிஸ் ஜோசப்.ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் டென்னிஸ் ஜோசஃபின் உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.  மலையாள சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய  மலையாள சினிமாவின் முன்னணி எழுத்தாளர், இயக்குனர் டென்னிஸ் ஜோசப்பிற்கு மலையாள திரை உலகத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் டெண்ணிஸ் ஜோசஃபின் மறைவு மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.