16 வது சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்ற 16 வது சட்டசபைத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அதன் படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினமே 33 பேர் கொண்ட தமிழக அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த சூழலில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று பதவியேற்ற நிலையில், அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிலையில் தான், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தற்காலிக சபாநாயகராக உள்ள கு.பிச்சாண்டி முன்னிலையில் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

அப்போது, தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதே போல், சட்டசபை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர், இன்று நண்பகல் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் சபாநாயகர் தேர்தலில் சபாநாயகராகத் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவுவும், துணை சபாநாயகராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இதனை திமுக நேற்று அறிவித்தது. 

சபாநாயக் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவதும் உறுதியாகி உள்ளது.

துணை சபாநாயகராகப் பொறுப்பேற்க உள்ள கு.பிச்சாண்டி, முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். சட்டசபையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவராக அவர் திகழ்கிறார்.

மேலும், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி. காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் நேற்றைய தினம் வழங்கினார்கள்.