ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் அணியாக வெளியேறுவது, சென்னை ரசிகர்களை அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடையச் செய்துள்ளது. 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சொதப்பலாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்றைய போட்டியிலும் மிகவும் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையைப் பந்தாடி அபார வெற்றி பெற்றது. 

சென்னை அணியில், காயம் காரணமாக பிராவோ விலகியுள்ளதால், இந்த போட்டியில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதல் முறையாக தாஹிருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டம் சென்னைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஓவரிலேய அந்த எதிர்பார்ப்பு எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது.  

அதாவது, சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய சென்னை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாகச் சொதப்பினார்கள். தொடக்க வீரராக களம் கண்ட இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் எல்.பி.டபில்யூ முறையில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக, நாராயணன் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமலும், அம்பத்தி ராயுடு 2 ரன்னிலும், டுப்ளீசிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறிப்போனது.

அடுத்து களமிறங்கிய ஜடேஜா 7 ரன்களிலும், கேப்டன் தோனி 16 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய சாம் கரன் நிதானமாக ஆடி அணியைச் சரிவில் இருந்து மீட்டார். சாம் கரன் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சென்னை அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியால் 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சாம் கரண் 52 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இம்ரான் தாஹிர் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில், ஐபிஎல் வரலாற்றில் 9 வது விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த ஜோடியாக சாம் கர்ண் - தாஹிர் ஜோடி திகழ்ந்தனர்.

115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக் - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த இணை தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நிலையில், நான்காவது ஓவருக்கு பின் விஸ்வரூபம் எடுத்து, இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். அதன்படி, மும்பை அணி 12.2 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களும், டி காக் 46 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. சென்னை அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த மிக மோசமான தோல்வியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வாய்ப்பை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, கடந்த 10 ஆண்டுகளாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் தனக்கான இடத்தை எப்போதும் அடைந்து விடும். ஆனால் இந்த முறை, முதல் முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இந்த தொடரிலிருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறுவது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக மாறி உள்ளது.