நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10000 பண்டிகை முன் பணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்து மாதங்களில் மாதம் 1000 ரூபாய் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவொரு பக்கம் இருக்க, கொரோனா பரவதலுக்கு முன்பிருந்தே, `நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகின்றது. மற்றொரு பக்கம், நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறைந்துவருகிறது, பொருளாதாரத்தில், பொருட்களின் தேவையின் அளவு குறைந்து வருகிறது. இதை உயர்த்த மத்திய அரசு அதிகமான வரிச்சலுகைகளை வழங்கிட வேண்டும்' என்று பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

மத்திய அரசு தலையீடு செய்வதற்கு தாமதகாவே, இடைய்ல் திடீரென கொரோனா வைரஸ் தாக்கம் உருவாகி, அதைத் தொடக்கும் பொருட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்யாவும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும் வர்த்தகம், கடைகளில் வியாபாரம் பாதித்து, பொருளாதாரத்தில் தேவையின் பக்கம் அடிவாங்கியது. நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவு குறையத் தொடங்கியது.

இதையடுத்து, நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும் என்பதை அறிந்து மத்திய அரசு தற்போது பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இதுபற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

``நாட்டின் பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் வகையிலும், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது.
 
6-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும்.

இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறது"

இவ்வாறு அவர் கூறினார்.

நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அறிந்து மத்திய அரசு தற்போது பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பண்டிகை கால சலுகையாக மத்திய அரசு அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.