காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து நீக்கப்பட்ட குஷ்பு, இராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். இது குஷ்புவின் இரண்டாவது இராஜினாமா கடிதம். 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு பின் நான்கே ஆண்டுகளில் அங்கிருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது ஆறு வருடங்கள் கழித்து தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார் குஷ்பு.

2013ஆம் ஆண்டு திமுகவின் அடுத்த தலைவர் குறித்தான பேச்சு எழுந்தபோது “திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று ஒரு முடிவுக்கு வரக்கூடாது” என குஷ்பு பேசியது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு காரணம், திமுகவில் அவர் எதிர்ப்பார்த்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என எதுவும் கிடைக்காத விரக்தியே என அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது. அதன்பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை திமுகவுடன் முடித்துக்கொண்டு காங்கிரஸை நோக்கி நகர்ந்தார் குஷ்பு.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அந்த ஆண்டு நவம்பர் மாதமே திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் குஷ்பு. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு “எனது வாழ்க்கையில் இது மகிழ்ச்சியான தருணம். எனது சொந்த வீட்டுக்கு நான் வந்ததைப்போல் உணருகிறேன்.” எனத் தெரிவித்தார். 

பிரச்சார பீரங்கியாய் மட்டுமிருந்த குஷ்பு, காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பை பெற்றார். ஆனால் அவர் எதிர்பார்த்த அதிகார ரீதியான எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. இருந்தபோதும் அவர் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். 

இப்படியான சூழலில் சில தினங்களுக்கு முன் குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாகச் செய்திகள் பரவத் தொடங்கியபோது. செய்தியாளர்களின் கேள்விக்கு குஷ்பு, “ஒரு ட்வீட்க்கு ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் பரப்புகின்றனர்” எனக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார்.

இருப்பினும் குஷ்புவின் அரசியல் ஓட்டம் பல்வேறு பாதைகளில் இருக்க. சில நாட்களாகவே அவர் பாஜகவில் இணையப்போவதாகச் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டார் குஷ்பு. அப்போது சென்னை விமான நிலையத்தில் 'பாஜகவில் இணையத்தான் டெல்லி செல்கிறீர்களா?' என்ற  செய்தியாளர்களின் கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்' என்று பதிலளித்துவிட்டுச் சென்றார். 

அவர் பாஜகவில் இணைவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அவரின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியைப் பறித்தது. அதனைத் தொடர்ந்து சில விநாடிகளிலேயே, ``காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நான் விலகுகிறேன்" என காங்கிரஸின் தலைமைக்கு கடிதம் அனுப்பினார் குஷ்பு.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.50 மணி அளவில் பாஜகவில் இணைந்தார் அவர். அந்த நிகழ்ச்சியின்போது தமிழக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். அதே வேளையில் குஷ்புவுக்கு ராஜ்யசபா சீட் வழங்க பா.ஜ.க திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஷ்புவின் அரசியல் பதவி 'கனவு' பா.ஜ.கவிலாவது பலிக்குமா என்கிற இணையவாசிகளின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குஷ்பு பாஜகவில் இணையப்போவது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ``அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமிதான் அவரை ஏற்றுத்தான் ஆக வேண்டும்" என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.