மயிலாடுதுறையில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவேக் ரவி ராஜ், வலிவலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள வில்லியநல்லூரைச் சேர்ந்த 25 வயதான சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணுக்கும், காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜுக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு உள்ளது.

இருவருக்கும் உள்ள நட்பானது, பின் நாட்களில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜ் - இளம் பெண் சுபஸ்ரீ இருவரும், காதலர்களாக ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

அப்படி ஊர் சுற்றும்போது, சுபஸ்ரீக்கு திருமண ஆசைகாட்டி, அந்த பெண்ணுடன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜ் உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இளம் பெண் சுபஸ்ரீ கர்ப்பமானார். இதனையடுத்து, தன் காதலன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜுக்கு, போன் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதை அந்த இளம் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த விவேக் ரவி ராஜ், “ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக சுபஸ்ரீயை சமாதானம் செய்து” உள்ளார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுபஸ்ரீயை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, காதலி சுபஸ்ரீயிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காதலி சுபஸ்ரீ, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சி உள்ளார். 

ஆனால், இந்த முறை விவேக் ரவிராஜின் பேச்சு முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது, “நான் காதலித்ததை வெளியில் யாரிடமும் கூறினால், குடும்பத்தோடு உன்னைக் கொன்று விடுவேன்” என்று, மிரட்டி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சுபஸ்ரீ, தன்னிடம் இருந்த ஆதாரங்களுடன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அத்துடன், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். 

இதன் தொடர்ச்சியாக இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாகிய காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜ் மீது, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இது குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து, ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக, இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று முன்கூட்டிய அறிந்த காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் தற்போது தலைமறைவாகி உள்ளார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.