“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என்று கூறி, பாஜக ஆதரவு அதிகாரிக்கு எதிராக உண்ணாவிரதம் மற்றும் கடலுக்கு அடியில் இறங்கி லட்சத்தீவு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

கேரளா கடற்கரையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக் கடலில் பகுதியில் அமைந்திருக்கும் லட்சத்தீவு, இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாகத் திகழ்கிறது. 

இந்த லட்டசத்தீவில், சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். அங்கு வாழும் பெரும்பாலான மக்கள், பல குடிகளாகவே உள்ளனர். 

இந்த லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா என்பவர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து, டாமன் - டையூ நிர்வாகத்தைக் கவனித்து வந்த பிரஃபுல் படேல் என்பவர், இந்த லட்சத்திவுக்கு பொறுப்பு நிர்வாகியாக பாஜக தலைமையிலான மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

குறிப்பாக, “இது வரை லட்சத்தீவில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த மத்திய அரசு, தினேஷ்வர் சர்மா மறைவிற்குப் பிறகு, அங்கு முதன் முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது உள்ளது. அதாவது, குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல் என்பவர், பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டராக வலம் வந்தார். இந்த அரசியல்வாதியைத் தான், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிப்பதற்குப் பதிலாக, பாஜக தலைமையிலான மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரபுல் கோடா பட்டேல் தான், லட்சத்தீவில் தற்போது நிலவும் ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் காரணம் என்று அந்த தீவில் வாழ்ந்து வரும் மக்கள் பகிரங்கமாகக் குற்றச்சாட்டி உள்ளனர்.

பிரபுல் கோடா பட்டேல் நியமனத்திற்குப் பிறகு, “சீர்திருத்தம் என்ற பெயரில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதித்தது, மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது, பள்ளிகளில் இறைச்சிக்குத் தடை விதித்தது” என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் அந்த தீவில் கடும் சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளன.

மிக முக்கியமாக, லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாகக் கொண்ட தாய், தந்தையருக்குப் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்கிற விதி உள்ளது. அந்த விதிகள் தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்யும் பிரஃபுல் படேலின் புது உத்தரவு அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

மேலும், லட்சத்தீவில் உள்ள கடலோர மக்களின் குடில்களை அகற்ற அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு லட்சத்தீவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், பாஜக ஆதரவு அதிகாரியான பிரஃபுல் பட்டேலை திரும்பப் பெறக்கோரி, லட்த்தீவில் உள்ள பல்வேறு தரப்பினரும் முதலில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தி லட்சத்தீவு மக்களில் பெரும்பாலானோர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்தவாறு 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர். 

முக்கியமாக, இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக லட்சத்தீவு மக்கள் சிலர், கடலுக்குள் இறங்கி, “லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” “எங்கள் வாழ்வியலையும், வாழ்க்கை முறையையும் காப்பாற்றுங்கள்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இதனால், கடந்த சில வாரங்களாக பேசப்படாமல் இருந்த லட்சத்தீவு பிரச்சனை மீண்டும் உலக அளவில் டிராண்டாகி வருகிறது. ஆனால், லட்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது வரை அமைதியாக இருந்து வருகிறது.

இதனிடையே, லட்சத்தீவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மேலும் சில விதிமுறைகளை யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்துள்ளது, அந்த தீவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.