“கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்றும், விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்றும், பிரதமர் மோடி உறுதுப்படத் தெரிவித்து உள்ளார்.
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை பாதிப்பு, சற்று குறைய தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி சற்று முன்பு உரையாற்றினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக” குறிப்பிட்டார். 

அத்துடன், “100 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரும் நோய் தொற்று உலக மக்களை பாதித்து வருகிறது என்றும், கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை நாம் இழந்திருக்கிறோம் என்றும், இதன் மூலமாக நாம் கடந்த 2 ஆண்டுகளில் இந்த கொரோனா தொற்றால் பல பாடங்களைக் கற்றிருக்கிறோம்” என்றும், தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

மேலும், “மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இது வரை இல்லாத அளவுக்கு நாம் செய்திருக்கிறோம் என்றும், அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று உள்ளோம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

“மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழியும் நிலையை நாம் கண்டு உள்ளோம் என்றும், இந்த கொரோனா பெருந்தொற்றால் மருத்துவத் துறையில் அடிப்படை வசதிகளை நாம் தற்போது மேம்படுத்தி உள்ளோம்” என்றும், அவர் கூறினார். 

“ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அவசரகதியில் எடுத்துச் செல்லும் வசதியை தற்போது நாம் பெற்றிருக்கிறோம் என்றும், வெளி நாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் தற்போது கொண்டு வந்துள்ளோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

“கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை நாம் தற்போது அதிகமாக உற்பத்தி செய்கிறோம்” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்” என்றும், சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “கொரோனா நமக்கு மிகப் பெரிய எதிரி என்றும், அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்” என்றும், மோடி சூளுரைத்தார். 

இதனால், “தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து நாம் தற்போது பயன்படுத்துகிறோம் என்றும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்றும், அவர் நினைவு கூர்ந்தார்.

முக்கியமாக, “குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை நாம் தொடங்கி உள்ளோம் என்றும், நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், பிரதமர் உறுதி அளித்தார். 

அதே நேரத்தில், “கொரோனாவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழிக்க, கடைசி வரை நாம் தடுப்பூசியை கொண்டுசெல்ல வேண்டியது நம் கடமை என்றும், எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்தரமாக இந்தியாவில் இருக்கும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளன என்றும், இது வரை 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன” என்பதையும், பிரதமர் சுட்டிக்காட்டினார். 

மிக முக்கியமாக, “இந்தியாவில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மூக்கில் விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டுமருந்து விரைவில் வரும்” என்றும், பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.