தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி  திரையுலகில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது நாம் அறிந்த விஷயமே. முன்னதாக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் அவர்களின் சிறுநீரக சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ள நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து திரையுலகில் நலிவடைந்து வரும் பல  கலைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி வருகிறார்.

 கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருவதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தினசரி தேவை சினிமா படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் இவர்களுக்கு உதவும் வகையில் பல பிரபல நடிகர், நடிகைகள் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த சூழலில் நடிகர் சிரஞ்சீவி தனது கொரோனா கிரிஸிஸ் சாரிட்டி & சிரஞ்சீவி சாரிட்டி ட்ரஸ்ட் சார்பாக தெலுங்கு திரை உலக தொழிலாளர்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி அளித்துள்ளார். பிரபல தனியார் மருத்துவமனையான அப்போல்லோ உடன் இணைந்து இந்த முகாமை தற்போது துவங்கி உள்ளார் நடிகர் சிரஞ்சீவி. 

இன்று துவங்கிய இந்த இலவச தடுப்பூசி முகாமில் தெலுங்கு திரை உலகைச் சார்ந்த பல தொழிலாளர்களும் சினிமா பத்திரிக்கையாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக பலரும் உதவி வரும் இந்த சூழலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சிரஞ்சீவி செய்துள்ள இந்த இலவச தடுப்பூசி முகாம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் பலரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.