மணமகன் குடித்து விட்டு தாலி கட்ட வந்ததால் கடும் அதிர்ச்சியடைந்த மணமகள், திருமணத்தை அப்படியே நிறுத்திவிட்டு, எல்லோர் முன்பும் வரதட்சணையைத் திருப்பி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கார் மாவட்டம் திக்ரி என்னும் பகுதியில் நேற்று முன் தினம் 7 ஆம் தேதி சனிக் கிழமை அன்று, இரு வீட்டார் முறைப்படி, திருமணம் நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

பெற்றோர் பார்த்து வைத்த அந்த திருமண நிகழ்வில் தாலி கட்டும் நேரம் வரை மணமகன் அந்த மண்டபத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியே முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டு நேரம் பார்த்து கடைசி நேரத்தில் மணமகனும், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலருடன் அந்த மணிமேடைக்கு நல்ல குடி போதையில் வந்திருக்கிறார். 

அப்போது, மணமேடைக்கு வந்த மணமகன், நல்ல குடிபோதையில் இருந்திருக்கிறார். இப்படி, மணமகன் குடிபோதையில் இருப்பது, அங்குள்ள எல்லோருக்கும் தெரியும்படியாக இருந்து உள்ளது. இதனால், சிலர் முகம் சுழித்தனர். பெண் வீட்டார் கடும் கோபம் அடைந்தனர்.

அந்த நேரம் பார்த்து, நல்ல குடிபோதையில் இருந்த மணமகன், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் மணப்பெண்ணை தன்னுடன் நடனமாடும்படி கூறியிருக்கிறார். ஆனால், அந்த மணப்பெண் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனையடுத்து, அந்த மணமகன், நடனம் ஆடும் படி அந்த மணப்பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். இதனால், இன்னும் எரிச்சல் அடைந்த அந்த மணப்பெண், “முடியவே முடியாது” என்று, விடாப்பிடியாக அதனை ஏற்காமல் மறுத்துவிட்டார்.

ஆனால், நல்ல குடிபோதையில் இருந்த அந்த மணமகன், நடனம் ஆடுவதாக கூறிவிட்டு அந்த மணமேடையில் நன்றாகக் குடிபோதையில் தள்ளாடி உள்ளார். இதனால், இரு தரப்பினரும் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த மணமகள், “எனக்கு இந்த திருமணம் வேண்டாம்” என்று, அமர்ந்திருந்த அவர் இருக்கையில் இருந்து அப்படியே எழுந்து விட்டார். பெண்ணின் இந்த முடிவுக்கு மணமகள் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். 

குறிப்பாக, திருமணத்திற்குப் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களை உடனடியாக திரும்பத் தருமாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டனர். 

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கடும் கோபம் அடைந்த பெண் வீட்டார் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, மாப்பிள்ளை வீட்டார் மீது புகார் அளித்தனர். 

இது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய போலீசார், “பெண் வீட்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட வரதட்சணைப் பொருட்களை, மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று, கூறினார்கள். இதற்கு மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்த நில மணி நேரத்தில் அந்த பொருட்களை எல்லாம் பெண் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, மணமகன் குடித்து விட்டு தாலி கட்ட வந்ததால் கடும் கோபம் அடைந்த மணமகள், திருமணத்தை அப்படியே நிறுத்திவிட்டு, எல்லோர் முன்பும் வரதட்சணையைத் திருப்பி கேட்டதால், காவல் நிலையம் வரை பஞ்சாயத்து சென்று இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.