“பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், மருத்துவர்கள் - செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனை அமைப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், அந்த துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் சென்று ஆய்வு நடத்தினர். 

இதனையடுத்து, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தென் சென்னையில் 250 கோடி ரூபாயில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக” குறிப்பிட்டார். 

“இந்த உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய வசதிகள் அமைய உள்ளதால், தென் சென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவர்” என்றும், கூறினார். 

அத்துடன், “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார். 

“சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும் போது மருத்துவர்களைத் தாக்கப்பட்டு உள்ள சம்பவங்கள், சில இடங்களில் நடந்துள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

குறிப்பாக, “பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது” என்றும், தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார்.

முக்கியமாக, “அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் நிலையை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டு உள்ளது என்றும். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு இனி உலகளாவிய டெண்டர் கோரப்படாது என்றும், அதற்கான அவசியம் இல்லை” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதே போல், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் செல்கிறார். அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 63 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்குக் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. அதன் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,123 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.