பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு 'எனது தோழி' நடவடிக்கையை தொடங்கியது இந்திய ரயில்வே. இந்த திட்டத்தின் கீழ் அவசரத் தேவைக்கு ‘182’ என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘எனது தோழி’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது.

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு எனது தோழி’ என்ற திட்டம், தென் கிழக்கு ரயில்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் இந்த திட்டத்தை தற்போது அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் விரிவு படுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அவசரத் தேவைக்கு ‘182’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். ரயில்வேத்துறை, ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் விவரங்களை சேகரித்து, குறிப்பாக தனியாக பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த எண்ணில் புகார் ஏதும் கொடுக்கப்பட்டால், ஆர்பிஎஃப் வீரர்கள் பயணியின் இருக்கை எண் மற்றும் ரயில் பெட்டி எண்ணை சேகரித்து ரயில் நிற்கும் இடங்களில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

இது மட்டுமில்லாமல் ரயிலில் பயணிக்கும் பாதுகாப்பு படை காவலர்கள், தனியாக செல்லும் பெண்களை கண்காணித்து பாதுகாப்பு வழங்குவார்களாம். இந்த திட்டத்தின் படி, பெண்களின் பயணம் பாதுகாப்புடன் அமைவது உறுதி செய்யப்படும் என்றும் பெண்கள் அந்த எண்ணில் விடுக்கும் அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பார்கள் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையின் முன்முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம், ரயில் பயணம் செய்யும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக பயணம் செய்பவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைப்பர். பயணத்தின் போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், 182 என்ற போன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் கூறுவர்.

அப்போதுதான் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் (ஆர்பிஎஃப்), பெண் பயணிகளின் இருக்கை எண், ரயில் பெட்டி எண் ஆகியவற்றை சேகரித்து, ரயில் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆர்பிஎப் காவல்துறையினருக்கு தெரிவிப்பர். அவர்கள், சம்பந்தப்பட்ட பெண் பயணிகளை கண்காணிப்பர். தேவைப்பட்டால், பெண் பயணிகளை தொடர்பு கொண்டு பேசுவர். ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் / மாநில ரயில்வே காவலர்களும் தனியாக பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பை வழங்குவர்.

சேர வேண்டிய இடம் வந்ததும், பெண் பயணிகளிடம் பாதுகாப்பு பற்றி கருத்துகளை ஆர்பிஎப் குழுவினர் சேகரிப்பர். இந்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ‘‘எனது தோழி’’ நடவடிக்கையின் கீழ் உள்ள ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடமிருந்து வரும் அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர்.

இந்த திட்டத்துக்கு, பெண்கள் மட்டுமன்றி பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.