கர்நாடகாவில் இளம் பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஏடிஜிபி ரவீந்திரநாத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வந்தவர் தான் இந்த ரவீந்திரநாத். இவர், கர்நாடக வனத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தற்போது பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னுடைய பதவியை அவர் திடீரென்று ராஜினாமா செய்து உள்ளார். இது, கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எதிர்மறையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.

அதாவது, ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக ஆயுதப்படை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். 

அப்போது, பெங்களூரு கண்ணிங்காம் ரோட்டில் உள்ள காபி ஷாப்புக்கு சீருடை அணியாமல் சாதாரண நபராக சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த 2 இளம் பெண்களை, அவர்களது அனுமதியின்றி தனது செல்போனில் ரவீந்திரநாத் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இது, அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக அவர் மீது, அங்குள்ள ஐகிரவுண்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், இரு இளம் பெண்களை செல்போனில் படம் பிடித்த சம்பவம், அப்போது அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சுனில்குமார், ஏ.எம். பிரசாத் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால், அவர்கள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு செய்து நேற்று முன் தினம் கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரவீந்திரநாத்திற்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரவீந்திரநாத் சில வழக்குகளில் சிக்கி இருந்தார். அது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்ததாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, அவருக்கு எந்த பதிவு உயர்வும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஏடிஜிபி ரவீந்திரநாத் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாகக் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர் விஜய பாஸ்கர் மற்றும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆகியோருக்கு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தொடர்பான கடிதத்தை ரவீந்திரநாத் அனுப்பி வைத்து உள்ளார். 

அந்த கடிதத்தில், ஐ.பி.எஸ். அதிகாரியாகக் கர்நாடக மக்களுக்கு சிறப்பான சேவை ஆற்றியுள்ளேன். எனது பணி காலத்தில் எந்த இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு இருந்தாலும், அரசின் உத்தரவை மதித்து நடந்துள்ளேன். ஆனால், எனது பணி காலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பல்வேறு பிரச்சினைகள், தொல்லைகளை அனுபவித்து வருகிறேன். இந்த பிரச்சினைகள் சிலரால் உருவாக்கப்பட்டதாகும். சிலர், எனக்கு மறைமுகமாகத் துன்புறுத்தல்களைக் கொடுத்து வருகிறார்கள். நான், என்னுடைய குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடைய ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று, கூறி உள்ளார்.

தற்போது ஏடிஜிபி ரவீந்திரநாத் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, கர்நாடக போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இதற்கு முன்னதாக ரவீந்திரநாத் 3 முறை ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததும், அவை நிராகரிப்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டி உள்ளது. 

அதே போல், மத்தியப் பிரதேசத்தில் மனைவியைத் தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.