பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ரகசிய பரோல் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரியானாவைச் சேர்ந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மித் ராம் ரஹிம் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் தொடரப்பட்டன.

அதாவது, கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது 2 பெண் சீடர்களை சாமியார் குர்மித் ராம் ரஹிம், பாலியல் பலாத்காரம் செய்தார் என்று, கடந்த 2002 ஆம் ஆண் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். 

இந்த வழக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சிபிஐ விசாரணைக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகையை அம்பாலா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2008 ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 

அதன் பிறகு, 2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் அண்டு ஆகிய ஆண்டுகளில் சாமியார் குர்மித் ராம் ரஹிம், மீது புகார் தெரிவித்த இரு பெண்களிடமும் வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்கு வழக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், சாமியார் குர்மித் ராம் ரஹிம், குற்றவாளி என்று கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜக்தீப் சீங், பத்திரிக்கையாளர் சத்ரபதி, கொலை வழக்கிலும் தீர்ப்பளித்தார். 

மேலும், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அவருக்கு வழங்கியது. தனை அடுத்து, அவர் ரோதக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதனால், அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். இதில், 100க் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, இத்தனை ஆண்டு காலம் அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விவசாயம் செய்வதற்காக தனக்கு பரோல் வேண்டும் என்று, சாமியார் குர்மித் ராம் ரஹிம், கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார். அதன் படி, அவருக்கு 42 நாட்கள்,  விவசாயம் செய்வதற்காக  பரோல் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், சாமியார் குர்மித் ராம் ரஹிமிற்கு கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஹரியானா மாநில அரசு அவருக்கு ரகசியமாக பரோல் வழங்கி உள்ளதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரை பார்க்க இந்த ஒரு நாள் பரோலுக்கு ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் அனுமதி கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த 24 ஆம் தேதி அன்று சுநாரியா சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், சிறையில் இருந்து அவரது தயார் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சாமியார் குர்மித் ராம் ரஹிம், தனது தாயாருடன் அன்றைய நாள் முழுவதும் பொழுதை செலவிட்டார் என்றும், அதன் பிறகு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரகசிய தகவல்கள், அந்த மாநில முதலமைச்சர் மற்றும் சில அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால்லுக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.