இந்திய இளம் வீரர்களைத் தொடர்ந்து சீண்டி வருவதால் கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து புதிய புதிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், இந்த போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.

இதில், கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, வெளியேறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கேப்டன் விராட் கோலி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அதாவது, கடைசியாக மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடிய போட்டியிலும், ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் கேப்டன் விராட் கோலி, சக இந்திய இளம் வீரர்களை சீண்டினார்.

அப்படி, கேப்டன் விராட் கோலி சீண்டிய போதிலும், அதற்கு இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் கோலிக்கு சரியான பதிலடி கொடுத்ததாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியானது. 

சமீபத்தில், இளம் வீரர் சூர்யகுமார் யாதவ்வை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்ற விவாதம் அனல் பறந்த சூழலில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்வை சீண்டிய போது, சூர்யகுமார் பயப்படவில்லை. மாறாக, அவரை முறைத்து விட்டு, பின்னர் அந்த இடத்தை விட்டு அமைதியாக வெளியேறினார். அந்த வீடியோ காட்சிகளை இணைத்து செய்திகள் தொடர்ந்து வெளியானது. அந்த போட்டியின் போது, பெங்களூர் அணியை கடைசி வரை களத்தில் நின்று வீழ்த்தி விட்டுத் தான் வெளியேறினார் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ்.

அதே போல், அடுத்து பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராகப் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடிய போது,  கேப்டன் விராட் கோலி, எதிர் அணியில் விளையாடிய இளம் இந்திய வீரர் மனிஷ் பாண்டேவையும் சீண்டினார்.

குறிப்பாக, அவர் ரன் எடுக்காமல் இருப்பது குறித்து இளம் வீரர் மனிஷ் பாண்டேவை, விராட் கோலி சீண்டினார். ஆனால், அடுத்த இரு பந்துகள் கழித்து மனிஷ் பாண்டே சிக்ஸ் அடித்து, அந்த சீண்டலுக்குத் தக்க பதிலடி கொடுத்தார்.

இளம் வீரர் மனிஷ் பாண்டே, குறிப்பிட்ட இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

இதனையடுத்து தான், கேப்டன் விராட் கோலி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, ஐபிஎல் தொடரில் எதிர் அணியில் விளையாடும் இளம் இந்திய வீரர்களைச் சீண்டுவது தவறான அணுகுமுறை என்றும், இது முற்றிலும் தவறான ஒரு செயல் என்றும், மூத்த வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கியமாக, தன்னுடைய அணி தோல்வி அடையும் போதெல்லாம் கோலி எதிர் அணியைத் தொடர்ந்து சீண்டுவதையே, அவர் கடை பிடித்து வருகிறார் என்றும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

”இந்திய அணியின் கேப்டனாக இருந்து கொண்டு சக இளம் வீரர்களை சீண்டுவது ஒரு கேப்டனுக்கான அழகா? என்றும், அப்படி செயல்படும் ஒரு கேப்டன் ஒரு திறமையான இளம் வீரருக்கு எப்படி வாய்ப்புகளை வழங்குவார்?” என்றும், விராட் கோலி கேப்டன் ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

அதே நேரத்தில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் 50 ரன்களை கடந்தார் என்றும், மற்ற போட்டிகளில் அவர் ஜொலிக்க வில்லை என்றும், அவர் மீது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.