தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெகபதிபாபு முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, “அடவிலோ அபிமன்யுடு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வளர்ந்து தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார். நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் நடிகராகவும் அசத்திய ஜெகபதி பாபு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 4 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த மதராசி திரைப்படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமான ஜெகபதிபாபு தொடர்ந்து  நடிகர் விக்ரமின் "தாண்டவம்", விஜயின் "பைரவா", அஜித்குமாரின் "விசுவாசம்" என பல முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "அண்ணாத்த" திரைப்படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடித்துவருகிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா திரைப்படத்தில் பணியாற்றிய ஜெகபதிபாபு மீண்டும் இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சில வருடங்களாக ஜெகபதிபாபு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் வில்லனாக  நடித்த அனேக திரைப்படங்களில் வைத்திருந்த வெள்ளை தாடி மீசையோடு இருக்கும் அந்த கெட்டப்பை தற்போது மாற்றியுள்ளார். 

கிளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியுள்ள ஜெகபதிபாபு தனது புகைப்படத்தை  டுவிட்டரில் பகிர்ந்ததும் அவருடைய பல நெருங்கிய நண்பர்கள் “மீண்டும் கதாநாயகனாக  நடிக்க உள்ளீரா?” என  கேட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, “இது புது திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்காக வெளியிட்ட புகைப்படம் அல்ல இப்படி தான் நான் இருந்தேன் என நினைவு படுத்தும் விதமாக வெளியிட்ட புகைப்படமே” என விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு பிரபல தென்னிந்திய நடிகர் ஜெகபதிபாபு பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்  ட்ரண்டாகி வருகிறது.