இந்திய சினிமாவின்  பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஆண் குழந்தைக்குத் தாயானார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் இந்தியாவில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு  இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல் விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்ன விட" என்ற பாடலின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். 

இதுவரை  சிறந்த பின்னணி பாடகிக்கான 4 தேசிய விருதுகளை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் 5 பிலிம்ஃபேர் விருதுகள் 9 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில்  மலையாள திரைப்படங்களுக்கு 4,  தமிழ் திரைப்படங்களுக்கு 2  கன்னட திரைப்படங்களுக்கு 2 மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் என அனைத்து மொழிகளிலும் தன் காந்தக் குரலால்  முத்திரை பதித்துள்ளார். 

கடந்த மே மாதம் 22ஆம் தேதி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இன்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி  அந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேவ்யான் முக்கோபத்யாய்  என தனது மகனுக்கு அழகான பெயரை சூட்டி  தன் கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் ஒரு அழகிய படத்தை டுவிட்டரில் பதிவு செய்து தனது செல்ல மகனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவதாக தெரிவித்து உள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல். ஸ்ரேயா கோஷல் தனது மகனுடன் இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறது.