“சுங்கச்சாவடியில் இனி 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லும் புதிய விதி” விரைவில் அமலுக்கு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா முழுவதும் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகக் கடந்த பிப்ரவரி மாதம் வரை, கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனால், சாலைகளில் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதன் காரணமாக, எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது என்றும், இவற்றுடன் பயணிகளின் நேரமும் வீணாகிறது என்றும் கூறப்பட்டு வந்தது. 

இந்த பிரச்சனையைத் தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறையை, கடந்த 2016 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன், அப்போதே “வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கிடைக்கும் என்றும், அதற்கான குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, அந்த ஸ்டிக்கர்களை பெற்றுக்கொண்டு, வாகனத்தின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொள்ள  வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டது.

 இதனால், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் அதற்கான கட்டணத்தைக் கழித்துக்கொள்ளும் என்றும், இதனால் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் அனைத்து பயணிகளும் பயணத்தைத் தொடரலாம் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் இந்த பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக அறிவித்தது. அதன்படி, தற்போது வரை இந்தியா முழுவதும் பாஸ்டேக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

எனினும், பல சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இது தொடர்பாகவும் புகார்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், “சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால், இனி கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம்“ என்கிற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

இது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 4 சக்கர வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தற்போது, பெரும்பாலான வாகனங்களும் இதனைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் கூறினார்.  இருக்கிறது.

மேலும், “சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன என்றும்,  அதன் படி சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு வரையப்படும் என்றும், இந்த கோட்டினை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தால், அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 வினாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக, இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன என்றும், இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும், அந்த அதிகாரி கூறினார்.