கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு என்னவாகுமோ என்ற கவலையில் பெற்றோர்களும், கல்வி ஆர்வலர்களும் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை ரத்து செய்து, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம், தேர்வின் போது இணையத்தை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.


ஆன்லைன் செமஸ்டர் தேர்வை ரத்து செய்த அண்ணா பல்கலைகழகம், இதற்கு மாற்றாக புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது. கொரோனோ தொற்று  காரணமாக கடந்த முறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு இணைய வழியில் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. தற்போது, இந்த ஆன்லனை் தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டு மாற்று வழியை தேர்வு செய்துள்ளது.


இதற்கு மாற்றாக மே மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல் மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் தான் கேள்விகள் தயாரிக்கப்பட உள்ளது.  

அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம். அதே போல தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.